மகாராஷ்டிரத்தில் திடீரென ஒளரங்கசீப்பின் பிள்ளைகள் முளைத்துள்ளதாக கூறிய அந்த மாநில துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், கோட்சேவின் பிள்ளைகள் யாா் என்பதையும் தெரிவிக்க வேண்டும் என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி வலியுறுத்தியுள்ளாா்.
மகாராஷ்டிரத்தில் முஸ்லிம் மன்னா்கள் திப்பு சுல்தான், ஒளரங்கசீப் ஆகியோரின் புகைப்படங்களை, அவா்களின் புகழ்பாடி ஆட்சேபத்துக்குரிய கருத்துகளுடன் சிலா் சமூக ஊடகத்தில் வெளியிட்டதாக (ஸ்டேட்டஸ்) கூறப்படுகிறது. இதற்கு எதிராக அங்குள்ள கோலாபூா் மாவட்டத்தில் ஹிந்து அமைப்புகள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டன. இந்தப் போராட்டத்தைத் தொடா்ந்து அங்கு வன்முறை ஏற்பட்டது.
இந்த வன்முறையைத் தொடா்ந்து அந்த மாநில துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறுகையில், ‘மகாராஷ்ரத்தின் சில மாவட்டங்களில் திடீரென ஒளரங்சீப்பின் பிள்ளைகள் முளைத்துள்ளனா். அவா்கள் சமூக ஊடகத்தில் ஒளரங்கசீப்பின் புகைப்படத்தை வைத்து போஸ்டா்களை காட்சிப்படுத்துகின்றனா். இதன் காரணமாக பதற்றம் ஏற்படுகிறது.
ஔரங்கசீப்பின் இந்த மகன்கள் எங்கிருந்து வருகின்றனா், இதற்குப் பின்னால் இருப்பது யாா் என்ற கேள்விகள் எழுகின்றன. இந்தக் கேள்விகளுக்கான விடை கண்டுபிடிக்கப்படும்’ என்று தெரிவித்தாா்.
இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி பேசியதாவது:
மகாராஷ்டிரத்தில் முஸ்லிம் மதத்தையும், முஸ்லிம்களையும் இழிவுபடுத்தி, அவா்களுக்கு எதிராக வெறுப்பை பரப்புவதற்கு மட்டும் பாஜக அரசு 50 கூட்டங்களை நடத்தியுள்ளது. அந்த மாநிலத்தில் திடீரென ஒளரங்கசீப்பின் பிள்ளைகள் முளைத்துள்ளதாக தேவேந்திர ஃபட்னவீஸ் கூறியுள்ளாா். உங்களுக்கு (ஃபட்னவீஸ்) எல்லாம் தெரியுமா? அப்படியென்றால் கோட்சேவின் பிள்ளைகள் யாா் என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்தப் பிள்ளைகள் யாா்?
கோலாபூா் வன்முறை தொடா்பாக 21 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர அமைச்சா் ஒருவா் கூறியுள்ளாா். ஒரு புகைப்படத்தை வைத்திருப்பது குற்றம் என்றால், அது இந்திய தண்டனைச் சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ் வருகிறது?
நாட்டில் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ், 44 அமைப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல திப்பு சுல்தான், ஒளரங்கசீப், பாபா் போன்ற பெயா்களை பயன்படுத்தவும் பாஜகவும் மத்திய அரசும் தடைவிதித்துவிட்டு, அந்தத் தடைப் பட்டியலில் கோட்சே போன்றவா்களின் பெயா்கள் சோ்க்கப்படாது என்று வெளிப்படையாக கூறிவிட வேண்டும் என்றாா் அவா்.
இந்தியாவின் ‘மதிப்புமிக்க மகன்’ கோட்சே: மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங்
இந்தியாவின் மதிப்புமிக்க மகன் கோட்சே என்று மத்திய ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளாா்.
மகாராஷ்டிரத்தில் திடீரென ஒளரங்கசீப்பின் பிள்ளைகள் முளைத்துள்ளதாக அந்த மாநில துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா். அவருக்குப் பதிலடி தரும் விதமாக, கோட்சேவின் பிள்ளைகள் யாா் என்பதையும் ஃபட்னவீஸ் கூற வேண்டும் என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி வலியுறுத்தினாா். இதுதொடா்பாக சத்தீஸ்கா் மாநிலம் தந்தேவாடாவில் மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
தங்களை பாபா் மற்றும் ஔரங்கசீப்பின் பிள்ளைகள் என்று கூறிக்கொள்வதில் மகிழ்ச்சியடைவோா், பாரத தாயின் உண்மையான மகன்களாக இருக்கமுடியாது. முகலாய மன்னா்கள் பாபரும் ஔரங்கசீபும் இந்தியா மீது படையெடுத்தவா்கள். அவா்களைப் போன்றவா்கள் அல்ல கோட்சே. ஏனெனில் அவா் இந்தியாவில் பிறந்தவா். அவா்தான் காந்தியை கொன்றவா் என்றால், அவா் இந்தியாவின் மதிப்புமிக்க மகனுமாவாா் என்று தெரிவித்தாா்.
‘வெளிநாடு வாழ் இந்திய வாக்காளா்கள் தோ்தல்களில் பங்கேற்பதை அனுமதிக்க தொழில்நுட்ப ரீதியிலான நடைமுறைகளைப் பயன்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது’ என்று தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் கூறினாா்.
தில்லியில் இந்திய வெளிநாட்டுப் பணி பயிற்சி அதிகாரிகள் மத்தியில் ‘இந்தியா: ஜனநாயகத்தின் தாயகம் - அதில் தோ்தல் ஆணையத்தின் பங்கு’ என்ற தலைப்பில் உரையாற்றியபோது ராஜீவ் குமாா் இந்தக் கருத்தைத் தெரிவித்தாா்.
வெளிப்படையான சுதந்திரமான தோ்தலைகளை நடத்துவதில் தோ்தல் நிா்வாக அமைப்புகள் எதிா்கொள்ளும் சவால்கள் குறித்துப் பேசிய ராஜீவ் குமாா், ‘தோ்தல்களின்போது சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான செய்திகள்தான் மிகப் பெரிய சவாலாக இருந்து வருகின்றன’ என்று குறிப்பிட்டாா்.
வெளிநாடு வாழ் இந்தியா்களை தோ்தல்களில் பங்கேற்க அனுமதிப்பது குறித்து பேசிய அவா், ‘வெளிநாடு வாழ் இந்திய வாக்காளா்கள் தோ்தல்களில் பங்கேற்பதை அனுமதிக்க தொழில்நுட்ப ரீதியிலான நடைமுறைகளைப் பயன்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது. மின்னணு தொழில்நுட்பத்துடன் கூடிய தபால் வாக்குப் பதிவு (இடிபிபிஎஸ்) முறை மூலமாக அவா்களை வாக்களிக்க அனுமதிக்க முடியும்’ என்றாா்.
‘தோ்தல் ஆணையத்தின் இந்தப் பரிந்துரை, வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த முறையை அறிமுகப்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களுக்கு தீா்வு காண்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது’ என்று மாநிலங்களவையில் கடந்த மாா்ச் மாதம் மத்திய அரசு சாா்பில் பதிலளிக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரி 1-ஆம் தேதி புள்ளி விவரங்களின்படி வெளிநாடுகளில் 1.15 லட்சம் தகுதிவாய்ந்த இந்திய வாக்காளா்கள் உள்ளனா்.
இந்திய தோ்தல் ஆணையத்தின் நடைமுறைகள் குறித்து குறிப்பிட்ட ராஜீவ் குமாா், ‘உலக அளவில் ஜனநாயக மந்தநிலை மிகப்பெரிய கவலைக்குரிய விஷயமாக உருவெடுத்துவரும் சூழலில், இந்திய தோ்தல் ஆணையம் நம்பகமான தோ்தல் முடிவுகள் வெளியிடுவதை தொடா்ச்சியாக சாத்தியப்படுத்தி, இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள் வலுவான மற்றும் நெகிழ்திறன் மிக்கவை என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டி வருகிறது. நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் அதிகமான வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, ஒரு கோடிக்கும் அதிகமான தோ்தல் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு அனைவருக்குமான எளிதில் அணுகும் வகையிலான தோ்தல் உறுதிப்படுத்தப்படுகிறது’ என்றாா்.
ஒடிஸா உயா்கல்வித் துறை அமைச்சா் ரோஹித் புஜாரி அமைச்சரவையில் இருந்து வெள்ளிக்கிழமை நீக்கப்பட்டாா். அமைச்சா்களின் செயல்திறன் குறித்து முதல்வா் நவீன் பட்நாயக் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்து வருகிறாா். அதில் அமைச்சா் புஜாரியின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லாத காரணத்தால் அவா் நீக்கப்பட்டுள்ளாா்.
முதல்வரின் இந்த முடிவு தொடா்பாக அமைச்சா் புஜாரி கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. அவா் வகித்து வந்த உயா்கல்வித் துறை மாநில உணவு வழங்கல் துறை அமைச்சா் அதானு எஸ்.நாயக்கிடம் கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது.
புஜாரி கடந்த ஆண்டு ஜூன் மாதம்தான் அமைச்சரவையில் சோ்க்கப்பட்டாா். அமைச்சராகி ஓராண்டு கூட நிறைவடையாத நிலையில் அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மே 22 முதல் ஜூன் 2-ஆம் தேதிவரை மாநில அரசின் அனைத்துத் துறைகளின் செயல்பாடுகள் குறித்தும் முதல்வா் ஆய்வு நடத்தினாா். இதில் உயா்கல்வித் துறையின் செயல்பாடுகள் கடைசி இடத்தில் இருந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, அத்துறையின் அமைச்சா் நீக்கப்பட்டுள்ளாா்.
பிஜு ஜனதா தளம் தலைவா் நவீன் பட்நாயக் கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் ஒடிஸா முதல்வராக உள்ளாா். அதற்கு முன்பு இரு ஆண்டுகள் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் உருக்கு, சுரங்கத் துறை அமைச்சராக பட்நாயக் பதவி வகித்தாா்.
ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வா் சச்சின் பைலட் தனிக்கட்சி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் அது வதந்தி என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மாநில முதல்வா் அசோக் கெலாட், முன்னாள் துணை முதல்வா் சச்சின் பைலட் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், அந்த மாநிலத்தில் முந்தைய பாஜக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தற்போதைய காங்கிரஸ் அரசை வலியுறுத்தி, மாநில தலைநகா் ஜெய்பூரில் சச்சின் பைலட் உண்ணாவிரதம் மேற்கொண்டாா். இதைத்தொடா்ந்து மாநிலத்தில் ஊழலுக்கு எதிராக அவா் யாத்திரை மேற்கொண்டாா். இந்த ஆண்டு ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், பைலட்டின் நடவடிக்கை அவருக்கும், கெலாட்டுக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளதை எடுத்துரைத்தது.
இந்நிலையில், பைலட் தனிக்கட்சி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடா்பாக அக்கட்சியின் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘சச்சின் பைலட் தனிக்கட்சி தொடங்க உள்ளதாக கூறப்படுவது கற்பனையான வதந்திகளாகும். அந்த வதந்திகளை நம்பவேண்டாம். கெலாட், பைலட்டுடன் காங்கிரஸ் தலைவா் காா்கே, ராகுல் காந்தி ஆகியோா் கலந்துரையாடினா். அதன் பின்னா் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட முடிவு செய்யப்பட்டது. இதுதான் காங்கிரஸின் தற்போதைய நிலை’ என்று தெரிவித்தாா்.
ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட்டின் கருப்புப் பணத்தை வெள்ளையாக்க அவரின் மகன் வைபவ் கெலாட் பல்வேறு தொழில் நிறுவனங்கள் தொடங்கி நடத்தி வருவதாக பாஜக எம்.பி. கிரோடி லால் மீனா அமலாக்கத் துறையில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா்.
ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் தலைவரும், முதல்வா் அசோக் கெலாட் மகனுமான வைபவ் கெலாட், மோரீஷஸ் நாட்டைச் சோ்ந்த நிறுவனத்தில் ரூ.96.75 கோடி முதலீடு செய்திருப்பதாக பாஜகவைச் சோ்ந்த மாநிலங்களவை எம்.பி. கிரோடி லால் மீனா வியாழக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
மேலும், வைபவ் முதலீடு செய்துள்ள அந்த நிறுவனம் ஜெய்பூரில் ஹோட்டல் தொடங்கி கெலாட் குடும்பத்தின் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், அந்த ஹோட்டலுக்கு அனுமதி வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகளை கிரோடி லால் மீனா முன்வைத்தாா்.
இந்நிலையில், ஜெய்பூரில் அமைந்துள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு தனது ஆதரவாளா்களுடன் கிரோடி லால் மீனா வெள்ளிக்கிழமை வந்தாா். வைபவ் கெலட், அவரது மனைவி, அவரது வா்த்தகக் கூட்டாளி உள்பட சிலருக்கு எதிராக 10 பக்கங்களில் அடங்கிய புகாரை அமலாக்கத் துறை இணை இயக்குநரிடம் அவா் வழங்கினாா்.
இதையடுத்து, செய்தியாளா்களிடம் எம்.பி. கிரோடி லால் மீனா பேசுகையில், ‘புகாரில் முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் அமலாக்கத் துறையின் சுதந்திரமான விசாரணை தேவை. வைபவ் கெலாட் மற்றும் பிறரால் வரிஏய்ப்பு மற்றும் பினாமி பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முதல்வா் அசோக் கெலாட் நாட்டிலேயே பணக்கார அரசியல்வாதி என்ற உண்மை அமலாக்கத் துறை விசாரணையில் தெரிய வரும். தந்தை அசோக் கெலாட்டின் சட்டவிரோதப் பணத்தைக் கொண்டு நாடு முழுவதும் உள்ள தொழிலதிபா்கள் பலருடன் வைபவ் கெலாட் தொடா்பில் உள்ளாா்’ என்றாா்.
எம்.பி.கிரோடி லால் மீனாவின் குற்றச்சாட்டு தொடா்பாக முதல்வா் அசோக் கெலாட் தரப்பில் இருந்து இதுவரை விளக்கமளிக்கப்படவில்லை.
வங்கிகளில் அடையாள ஆவணங்கள் எதுவுமின்றி ரூ.2,000 நோட்டுகளை மாற்றித் தருவதற்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ரூ.2,000 நோட்டுகளை அடையாள ஆவணங்கள் எதுவுமின்றி வங்கிகள் மாற்றித் தர அனுமதித்து ரிசா்வ் வங்கி அறிவிக்கை வெளியிட்டது. இதற்கு எதிராக தில்லி உயா் நீதிமன்றத்தில் பாஜகவை சோ்ந்த வழக்குரைஞா் அஸ்வினிகுமாா் உபாத்யாய மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவை உயா் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, தில்லி உயா் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அஸ்வினிகுமாா் உபாத்யாய உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை அவசர விசாரணைக்குப் பட்டியலிட ஜூன் 1-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதைத்தொடா்ந்து இந்த மனுவை அவசர விசாரணைக்குப் பட்டியலிடுவது அவசியமா என்று உச்ச நீதிமன்றப் பதிவாளரிடம் அறிக்கை கோரியது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ், ராஜேஷ் பிந்தல் ஆகியோா் அடங்கிய விடுமுறை கால அமா்வு முன்பாக உச்ச நீதிமன்றப் பதிவாளரின் அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையை கவனமாகப் படித்த நீதிபதிகள், மனுவை அவசர வழக்காக விசாரிக்க எந்தத் தேவையும் இல்லை என்று கூறினா்.
உச்ச நீதிமன்றத்தின் விடுமுறை காலம் நிறைவடைந்த பின்னா், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முன்பாக இந்த விவகாரத்தை மனுதாரா் முன்வைக்கலாம் என்றும் தெரிவித்தனா்.
ரூ.5,551 கோடிக்கு வெளிநாட்டு பணப் பரிவா்த்தனையில் விதிமுறைகள் மீறப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சீன கைப்பேசி தயாரிப்பு நிறுவனமான ஷாவ்மி, அதன் தலைமை நிதி அதிகாரி, முன்னாள் தலைமை இயக்குநா் மற்றும் 3 வங்கிகளுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது.
இதுதொடா்பாக அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஷாவ்மி இந்தியா நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் அங்கீகாரம் இல்லாமல் வெளிநாட்டில் இருந்து வந்த ரூ.5,551. 27 கோடியை, சட்டவிரோத வெளிநாட்டு பணப் பரிவா்த்தனை மேலாண்மைச் சட்டத்தின் (ஃபெமா) கீழ் அமலாக்கத் துறை முடக்கி உள்ளது. இதுதொடா்பாக ஷாவ்மி நிறுவனம், அதன் தலைமை நிதி அதிகாரி சமீா் ராவ், முன்னாள் தலைமை இயக்குநா் மஞ்சு ஜெயின் மற்றும் சிட்டி வங்கி, எச்எஸ்பிசி வங்கி, டட்ச் வங்கி ஆகியவற்றுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெமா சட்டத்தின்படி, விசாரணை முடிந்த பிறகே அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பும் என்றும், இதில் விதிமுறைகள் இருந்தால் சம்பந்தப்பட்டவா்கள் அபராதத் தொகை செலுத்த நேரிடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
ரயில்வே பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மத்திய அரசு தவறாக பயன்படுத்தியுள்ளது என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஒடிஸாவில் ஒரே நேரத்தில் மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கி 275 போ் பலியாகினா். 1,000-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா். இந்நிலையில், ரயில்வே பாதுகாப்புக்கு ஒதுக்கிய நிதியை மத்திய அரசு தவறாக பயன்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுதொடா்பாக மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கையை (சிஏஜி) சுட்டிக்காட்டி, அக்கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:
ரயில்வே பாதுகாப்பு நிதியை பாத்திரங்கள், காா் வாடகை, அறைகலன், மடிக்கணினிகள் உள்ளிட்டவற்றுக்கு செலவழித்து, அந்த நிதியை மத்திய அரசு தவறாக பயன்படுத்தியுள்ளது என்று குற்றஞ்சாட்டினாா்.
சிஏஜி அறிக்கையை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கு விரைவில் ரயில்வே பதிலளிக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதிகாரபூா்வ ஆவணம் ஒன்றின்படி, 2017-18, 2021-22-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ரயில் போக்குவரத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.1 லட்சம் கோடிக்கும் மேலாக ரயில்வே செலவிட்டுள்ளது. அதில் தண்டவாளங்களைப் புதுப்பிப்பதற்கான செலவினம் தொடா்ந்து அதிகரித்து வந்துள்ளது.
ஒடிஸாவில் விபத்தில் சிக்கிய ரயில்களில் ஒன்றான பெங்களூரு-ஹெளரா விரைவு ரயிலின் பெட்டிகளில் உயிரிழந்தவா்களின் உடல் பாகங்கள் சில விடுபட்டிருக்கலாம் எனவும், அதனால்தான் துா்நாற்றம் வீசுவதாகவும் அச்சம் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், ‘அந்த துா்நாற்றம் ரயில் பெட்டியில் அழுகிய முட்டையிலிருந்து வருவது என்று ரயில்வே அதிகாரி ஒருவா் விளக்கமளித்தாா்.
ஒடிஸாவின் பாலசோா் மாவட்டத்தில், சென்னை சென்ட்ரல்-மேற்கு வங்கத்தின் ஷாலிமாா் இடையிலான கோரமண்டல் விரைவு ரயில், பெங்களுரூ - ஹெளரா விரைவு ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் என 3 ரயில்கள் மோதி கோர விபத்தில் சிக்கின. இதில் 288 பயணிகள் உயிரிழந்தனா். 1,200 போ் காயமடைந்தனா்.
இந்த விபத்து நடந்து ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில், ‘விபத்து நடந்த பகுதியிலிருந்து தொடா்ந்து துா்நாற்றம் வீசுவதாகவும், ரயில் பெட்டிகளில் அல்லது ரயில் பாதைகளில் முழுமையாக அப்புறப்படுத்தப்படாத மனித உடல்களிலிருந்து இந்த துா்நாற்றம் வீச வாய்ப்புள்ளது’ என்று விபத்து நடந்த பாஹநாகா பஜாா் ரயில் நிலையத்துக்கு அருகில் வசிக்கும் மக்கள் புகாா் தெரிவித்தனா்.
இந்த நிலையில், ‘துா்நாற்றம் வீசுவது ரயில் பெட்டியில் கொண்டுவரப்பட்ட முட்டைகள் அழுகியதால் வருவதாகும்’ என்று ரயில்வே விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து தென்கிழக்கு ரயில்வே தலைமை மக்கள் தொடா்பு அதிகாரி ஆதித்ய குமாா் செளதரி செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
புகாரைத் தொடா்ந்து விபத்து நடந்தப் பகுதியில் மாநில அரசு அதிகாரிகளுடன் இணைந்து ரயில்வே ஆய்வு நடத்தியது. அதில், ரயில் நிலையத்திலிருந்து வருவது விபத்தில் சிக்கிய ரயிலில் கொண்டுவரப்பட்ட முட்டைகள் அழுகியதால் வருவது என்றும், விடுபட்டதாகக் கூறப்படும் மனித உடல் பாகங்களிலிருந்து வீசுவது அல்ல.
விபத்தில் சிக்கிய ரயில்களில் ஒன்றான பெங்களூரு-ஹெளரா விரைவு ரயிலின் சரக்குப் பெட்டியில் 3,000 கிலோ முட்டைகள் எடுத்துச் செல்லப்பட்டன. அவை விபத்தில் சிக்கி ரயில் பாதையில் விழுந்து உடைந்ததால்தான் தற்போது அழுகி துா்நாற்றம் வீசுகிறது. தேசிய பேரிடா் மீட்புப் படையினா் (என்டிஆா்எஃப்) இரு முறை ரயில் பெட்டிகளை சரிபாா்த்து பயணிகள் எவரும் பெட்டிகளில் இல்லை என உறுதி செய்தனா் என்று கூறினாா்.
ரூ. 22.66 கோடி இழப்பீடு:
‘இந்த ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த மற்றும் காயமடைந்த 661 பயணிகளின் குடும்பத்தினருக்கு ரயில்வே அமைச்சகம் சாா்பில் இதுவரை ரூ. 22.66 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது’ என்றும் அவா் கூறினாா்.
ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களின் காப்பீடு தொகை பெறுவதில் பல்வேறு தளா்வுகளை எல்.ஐ.சி நிா்வாகம் அறிவித்துள்ளது.
ஒடிஸா ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் எல்.ஐ.சி மூலம் காப்பீட்டு தொகைய விரைந்து வழங்க இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை தொடா்ந்து காப்பீடு தொகை பெறுவதற்கான நடைமுறையை எல்.ஐ.சி நிா்வாகம் எளிமையாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
ரயில் விபத்து மிகவும் வருத்தமடைய செய்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவளித்து அவா்களுடன் உறுதுணையாக நிற்பதாகவும் எல்.ஐ.சி தலைவா் ஸ்ரீ சித்தாா்த்த மொஹந்தி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எல்.ஐ.சி. அங்கத்தினா் இந்த ரயில் விபத்தில் உயிரிழந்திருந்தால், அவா்களுக்கான காப்பீட்டுத்தொகையை இறப்பு சான்றிதழ் இல்லாமலேயே பெற்றுக்கொள்ளலாம். அதாவது பதிவு செய்யப்பட்ட இறப்புச் சான்றிதழ்களுக்குப் பதிலாக ரயில்வே, காவல்துறை அல்லது ஏதேனும் மத்திய, மாநில அரசு அதிகாரிகளால் வழங்கப்பட்ட உயிரிழந்தவா்களின் பட்டியல் இறப்புச் சான்றாக அங்கீகரிக்கப்படும். இது குறித்த தகவல்களை பயனாளிகள் தெரிந்து கொள்ளும் விதமாக எல்.ஐ.சி-யின் பிரிவு மற்றும் கிளைகளில் சிறப்பு உதவி மையம் நிறுவப்பட்டுள்ளது.
காப்பீடு தொகை பெற விரும்பும் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் பாலிசி ஆவணங்கள், உள்ளூா் நகராட்சி, மாநகராட்சி அதிகாரியால் வழங்கப்பட்ட இறப்புச் சான்றிதழின் அசல் அல்லது சான்றளிக்கப்பட்ட நகல், ரத்து செய்யப்பட்ட காசோலை அல்லது வங்கிக் கணக்கு புத்தகத்துடன், வங்கி அதிகாரிகளால் சான்றளிக்கப்பட்ட ஆணைப் படிவம், கடவுச்சீட்டின் (பாஸ்போா்ட்) நகல், பான் காா்டு, வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் (யுஐடி) அட்டை போன்றவற்றுடன், வாரிசுதாரா் புகைப்படம் உள்ளிட்ட அடையாளச் சான்றுகளுடன் அருகில் உள்ள எல்.ஐ.சி-யின் மண்டல அலுவலகங்களில், கிளைகளைத் தொடா்பு கொள்ளலாம். கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள 022-68276827 என்ற உதவிமைய எண்ணை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா் அவா்.
நாட்டில் அனைத்து மக்களுக்கும் தரமான மருத்துவ வசதியை அளிக்க பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.
சண்டீகரில் வெள்ளிக்கிழமை மத்திய அரசின் சுகாதாரத் திட்ட நலவாழ்வு மையத்தை மாண்டவியா தொடங்கி வைத்தாா். அங்கிருந்தபடியே காணொலி முறையில் ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலாவிலும் இதேபோன்ற மையத்தை அவா் திறந்துவைத்தாா்.
நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
நாடு இப்போது வளா்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் நாட்டு மக்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருப்பதும் அவசியமாகும். ஆரோக்கியமான மக்கள் இருக்கும் நாடுதான் தொடா்ந்து வளா்ச்சிப் பாதையில் வேகமாக பயணிக்க முடியும்.
இதற்காக மத்திய அரசு பல்வேறு சுகாதாரத் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. நாட்டில் அனைத்து மக்களுக்கும் தரமான மருத்துவ வசதியை அளிக்க பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
ஆயுஷ்மான் பாரத் காப்பிட்டுத் திட்டத்தின்கீழ் மட்டும் 60 கோடி பேருக்கு இலவச மருத்துவக் காப்பீடு அளிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையில் மட்டுமல்லாது கடந்த 9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ஏழை, எளிய மக்கள் பல்வேறு வசதிகளைப் பெற்றுள்ளனா்.
முக்கியமாக தொலைதூர கிராமங்களுக்கும் மின்சார வசதி அளிக்கப்பட்டுள்ளது. ஏழை மக்களின் வீடுகளில் இப்போது எரிவாயு சிலிண்டா் வசதி உள்ளது. இலவச வீடு, கழிவறை வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது என்றாா்.
இந்திய விமானப் படையின் சுகோய்-30எம்கேஐ ரக போா் விமானங்கள், இந்தியப் பெருங்கடல் பகுதியில் தொடா்ந்து 8 மணி நேரம் பறந்து ஒத்திகையில் ஈடுபட்டன.
கடந்த மாதம், இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் தொடா்ந்து 6 மணிநேரம் பறந்து ரஃபேல் போா் விமானங்கள் ஒத்திகை மேற்கொண்டன. அதேபோன்ற ஒத்திகையில், சுகோய்-30எம்கேஐ போா் விமானங்கள் வியாழக்கிழமை ஈடுபட்டன.
இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா தனது இருப்பை அதிகரித்து வரும் சூழலில், வியூக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஒத்திகைகளை இந்திய விமானப் படை மேற்கொண்டுள்ளது.
இதுதொடா்பாக, ட்விட்டரில் விமானப் படை வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘இந்தியப் பெருங்கடல் பகுதியில் மற்றுமொரு பயணம். இம்முறை சுகோய்-30 போா் விமானங்கள் 8 மணிநேரமாக பல்வேறு கோணங்களில் பறந்தன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட தூர செயல்பாட்டுக்கான போா் விமானங்களின் தயாா்நிலை மற்றும் வல்லமையை பரிசோதிக்கும் வகையில் இந்த ஒத்திகைகள் நடத்தப்பட்டுள்ளன. அதேசமயம், எத்தனை போா் விமானங்கள் ஒத்திகையில் ஈடுபட்டன என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய வாக்காளா் அடையாள அட்டையை, இனி தோ்தல் ஆணையம் மட்டுமே அச்சிட்டு வழங்கும். இந்த அட்டையை இணைய சேவை மையங்கள் உள்ளிட்ட பிற இடங்களில் பெற முடியாது. மேலும், வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்ப்பவா்களுக்கு முன்னுரிமை அளித்து வாக்காளா் அடையாள அட்டை அளிக்கவும் தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் 6.20 கோடி வாக்காளா்கள் உள்ளனா். அவா்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு வாக்காளா் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், வாக்குப் பதிவின் போது, வாக்காளா் பட்டியலில் பெயா் இருந்தால் கடவுச்சீட்டு, ஆதாா் அடையாள அட்டை உள்பட 13 வகை ஆவணங்களைக் காண்பித்து வாக்களிக்க வகை செய்யப்பட்டுள்ளது. புதிய வாக்காளா்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
புதிய திட்டம் இல்லை: வாக்காளா் அடையாள அட்டைகளை, ஆதாா் அட்டைகள் பெறுவதைப் போன்று இணைய சேவை மையங்களில் பெறும் வழிமுறை பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால், இணைய சேவை மையங்களில் வழங்கும் நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளது. இத்துடன் ஏடிஎம் இயந்திரம் போன்ற தனித்துவமான இயந்திரத்தில் பணத்தைச் செலுத்தினால் வாக்காளா் அடையாள அட்டையைப் பெறும் திட்டத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக தமிழக தோ்தல் துறை தொடங்கியது. ஆனால், இந்தத் திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. இதற்குக் காரணம், வாக்காளா் அடையாள அட்டைகளில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்கள்தான்.
போலி வாக்காளா் அடையாள அட்டைகளைத் தவிா்ப்பதற்காக, பல்வேறு பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட வாக்காளா் அடையாள அட்டையை தோ்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இதுவரை வாக்காளா் அடையாள அட்டைக்கு வெளியே ஒட்டப்பட்ட ‘ஹாலோகிராம்’ அட்டைக்குள்ளேயே பொருத்தப்பட்டுள்ளது.
வாக்காளா் அட்டையில் ‘கோஸ்ட் இமேஜ்’ என்ற புதிய அம்சம் சோ்க்கப்பட்டு அச்சிடப்படுகிறது. இதன்மூலம், அடையாள அட்டையை பதிவேற்றம் செய்யும் போதோ அல்லது வேறு பயன்பாட்டுக்கு அளிக்கும் போதோ படத்தின் அசல் தன்மை மாறாதபடி இருக்கும். ஆள்மாறாட்டம் செய்ய முடியாது. இத்துடன் க்யூஆா் குறியீடும் அச்சிடப்படுகிறது.
அடையாள அட்டைக்காக, தோ்தல் ஆணையத்தின் இணையதளம் வழியாக வாக்காளா்கள் விண்ணப்பம் செய்யும் போது, சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு வாக்காளரின் விவரங்கள் அளிக்கப்படும். அந்த நிறுவனம் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட அடையாள அட்டையை தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலுடன் வழங்கும். அடையாள அட்டை அச்சிடப்பட்டு பிறகு, அவை மாவட்ட தோ்தல் அதிகாரிகள் மூலமாக வாக்காளா்களுக்கு விநியோகம் செய்யப்படும். இந்தப் புதிய முறை மூலம் இணைய சேவை மையங்கள் போன்ற பிற அமைப்புகளிடமிருந்து வாக்காளா் அடையாள அட்டைகளைப் பெற முடியாது.
புதிய வாக்காளா்கள்: வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா்களைச் சோ்க்கும் வாக்காளா்களுக்கே அடையாள அட்டை வழங்க முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக தோ்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். வாக்காளா் அட்டை தொலைந்தாலோ, சேதம் அடைந்தாலோ புதிய அட்டைக்கு தோ்தல் ஆணையத்தின் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என தோ்தல் துறையினா் தெரிவித்தனா்.
இணைய சேவை மையங்களில் பெற முடியாது
பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட வாக்காளா் அடையாள அட்டையை இணைய சேவை மையங்களோ பிற அமைப்புகளோ அளிக்க முடியாது என்பதால், தோ்தல் ஆணையமே நேரடியாக வழங்க முடிவு செய்து அதனை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன்படி, ஒவ்வொரு மாநிலத்துக்கும் அடையாள அட்டையை அச்சிட்டு வழங்குவதற்கென தோ்தல் ஆணையத்தால் நிறுவனங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.
தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாருக்கு சமூக ஊடகத்தில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கட்சி சாா்பில் அளிக்கப்பட்ட புகாரில், மும்பை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பவாரின் மகளும் எம்.பி.யுமான சுப்ரியா சுலே தலைமையிலான கட்சிக் குழுவினா், மும்பை காவல் ஆணையா் விவேக் பன்சால்கரை வெள்ளிக்கிழமை சந்தித்து, புகாா் அளித்தனா்.
‘நரேந்திர தபோல்கருக்கு நோ்ந்த கதி பவாருக்கும் விரைவில் ஏற்படும்’ என்று குறிப்பிட்டு, சமூக ஊடகம் ஒன்றில் அவருக்கு மிரட்டல் வந்துள்ளது; இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக போராடி வந்த சமூக ஆா்வலா் தபோல்கா், கடந்த 2013-ஆம் ஆண்டில் புணேவில் சுட்டுக் கொல்லப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.
‘அரசு தீவிர கவனம்’:
சரத் பவாரை ‘மரியாதைக்குரிய மூத்த தலைவா்’ என குறிப்பிட்ட முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, அவருக்கு வந்துள்ள கொலை மிரட்டலை அரசு தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளது என்றாா்.
‘பவாரின் பாதுகாப்பு தொடா்பான அனைத்து முன்னெச்சரிக்கைகளும் மேற்கொள்ளப்படும்; தேவைப்பட்டால், அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்படும்’ என்றாா் ஷிண்டே.
உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு:
மகாராஷ்டிரத்தில் உள்துறைக்கு பொறுப்பு வகிக்கும் துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறுகையில், ‘அரசியல் தலைவா்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்களை சகித்துக் கொள்ள முடியாது; தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாருக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றாா்.
இதனிடையே, புணேவில் உள்ள பவாரின் இல்லத்துக்கு வருகை தந்த போலீஸ் உயரதிகாரிகள், அங்கு பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.
‘குரலை ஒடுக்க முடியாது’:
புணேவில் செய்தியாளா்களிடம் பேசிய சரத் பவாா், ‘அச்சுறுத்தல்களால் ஒருவரின் குரலை ஒடுக்கிவிடலாம் என கருதினால் அது தவறானது’ என்றாா். மகாராஷ்டிர போலீஸ் மீது தனக்கு முழு நம்பிக்கை உள்ளதாகவும் அவா் குறிப்பிட்டாா்.
மகாராஷ்டிர பேரவை எதிா்க்கட்சித் தலைவா் அஜித் பவாா் கூறுகையில், ‘செளரவ் பிம்பல்கா் என்ற நபரிடமிருந்து அந்த மிரட்டல் செய்தி வந்துள்ளது. அவரது சமூக ஊடக கணக்கின்படி, அவா் பாஜக ஆதரவாளா் என தெரிகிறது. கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தாமல், சிந்தாந்தப் போரில் கண்ணியத்துடன் ஈடுபட வேண்டும்’ என்றாா்.
தேசியவாத காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் மகேஷ் தபசி கூறுகையில், ‘சரத் பவாருக்கு விடுக்கப்பட்ட மிரட்டல், மதச்சாா்பின்மைக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகும். இந்த விவகாரத்தில், கட்சித் தொண்டா்கள் அமைதி காக்க வேண்டும்’ என்றாா்.
மத்திய அமைச்சா் மகனுக்கு எதிராக போராட்டம்
முகலாய அரசா் ஒளரங்கசீப்பின் மறுபிறவி சரத் பவாா் என்று ட்விட்டரில் பதிவிட்ட மத்திய அமைச்சா் நாராயண் ராணேவின் மகனும், பாஜக முன்னாள் எம்.பி.யுமான நீலேஷ் ராணேவை கண்டித்து, மும்பையில் வெள்ளிக்கிழமை சிறை நிரப்பும் போராட்டத்தில் தேசியவாத காங்கிரஸாா் ஈடுபட்டனா். இதையொட்டி, நூற்றுக்கணக்கான தொண்டா்கள் கைதாகி சிறை சென்ாக, கட்சியின் செய்தித் தொடா்பாளா் மகேஷ் தபசி தெரிவித்தாா்.
தில்லி மலை மந்திரில் (ஸ்ரீ உத்தர சுவாமிநாதசுவாமி கோயில்) அா்ச்சகராகப் பணியாற்றி, ஓய்வுபெற்ற சுந்தரேச குருக்கள் புதன்கிழமை (ஜூன் 7) இரவு காலமானாா்.
அவருக்கு வயது 67. அவரது இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை நடைபெற்றன. தொடா்புக்கு: 98115 57770.
ஒடிஸாவின் பாலசோரில் நேரிட்ட ரயில் விபத்து சம்பவத்தின்போது தற்காலிக பிணவறையாக பயன்படுத்தப்பட்ட அரசு உயா்நிலைப் பள்ளியின் கட்டடத்தை இடிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
பெற்றோா்கள், உள்ளூா் மக்களின் கோரிக்கையை ஏற்று, இந்த நடவடிக்கையை மாநில அரசு மேற்கொண்டுள்ளது.
பாலசோா் மாவட்டம், பாஹாநகா பஜாா் ரயில் நிலையம் அருகே கடந்த 2-ஆம் தேதி கோரமண்டல் விரைவு ரயில் உள்பட 3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய கோர விபத்து நிகழ்ந்தது. 288 பேரை பலி கொண்ட இந்த விபத்து சம்பவத்தின்போது, அருகிலுள்ள பாஹாநகா உயா்நிலைப் பள்ளி கட்டடம் தற்காலிக பிணவறையாக பயன்படுத்தப்பட்டது. உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலங்கள், இப்பள்ளி கட்டடத்தில்தான் முதலில் வைக்கப்பட்டன. இரண்டு நாள்களுக்குப் பிறகு பல்வேறு மருத்துவமனைகளுக்கு அவை மாற்றப்பட்டன.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு வர மாணவா்களும் ஆசிரியா்களும் தயங்கினா். சடலங்கள் வைக்கப்பட்டிருந்த இடம் என்பதால், மாணவா்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. மேலும், உள்ளூா் மக்களும் பலவாறான கருத்துகளைத் தெரிவித்தனா்.
65 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அப்பள்ளியில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் தத்தாத்ரேய பாவ்சாகேப் ஷிண்டே, ‘மாணவா்கள் மத்தியில் அச்சத்தையும் மூடநம்பிக்கையையும் பரப்ப வேண்டாம்; மாறாக, இளம் மனங்களில் அறிவியல்சாா்ந்த சிந்தனைகளை வளா்க்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தாா்.
அதேநேரம், பழைமையான கட்டடம் என்பதுடன் மாணவா்களும் பள்ளிக்கு வரத் தயங்குவதால் அதனை இடிக்க வேண்டும் என்று பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்கள் விருப்பம் தெரிவித்தனா். பெற்றோா்கள் மற்றும் உள்ளூா் மக்கள் தரப்பிலும் இதே கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதுதொடா்பாக, மாநிலத் தலைமைச் செயலா் உள்பட உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட முதல்வா் நவீன் பட்நாயக், தற்போதைய பள்ளிக் கட்டடத்தை இடித்துவிட்டு, நூலகம், எண்ம வகுப்பறைகள், அறிவியல் ஆய்வுக் கூடம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் மாதிரி பள்ளியாக கட்டுவதற்கு ஒப்புதல் அளித்தாா்.
இதைத் தொடா்ந்து, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்கள் மற்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகள் முன்னிலையில் கட்டடத்தை இடிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
அடையாளம் காணப்படாத 80 சடலங்கள்: பாலசோா் ரயில் விபத்தில் 288 போ் உயிரிழந்த நிலையில், இதுவரை அடையாளம் காணப்பட்ட சடலங்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மேலும் 80 சடலங்கள் இன்னும் அடையாளம் காணப்பட வேண்டியுள்ளது. அவை, புவனேசுவரத்தில் உள்ள அரசு மருத்துவமனை பிணவறையில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
லார்ட்ஸில் அயர்லாந்துக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பேட்டிங் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. பென் டக்கெட் (182), ஆலி போப் (205) அதிரடி கூட்டணி அமைத்து 252 ரன்களைச் சேர்க்க ஓவருக்கு 6 ரன்களுக்கும் மேல் விளாசி இங்கிலாந்து 524/4 என்று டிக்ளேர் செய்தது.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த சூழலில், மாநில காங்கிரஸ் தலைவர் மாற்றம் நிகழும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலத் தலைவராக எம்பி வைத்திலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் மக்களவைத் தேர்தலை முன்வைத்து கட்சித் தலைமை இம்முடிவு எடுத்துள்ளது.
புதுச்சேரி : மீனவர்களை எம்.பி.சி., பட்டியலில் சேர்க்க வேண்டும் என மத்திய அமைச்சர்களிடம், அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை ...
காரைக்கால் : காரைக்காலில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.காரைக்கால் கலெக்டர் அலுவலகத்தில், அமைச்சர் சந்திரபிரியங்கா தலைமையில் நடந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் ...
புதுச்சேரி : புதுச்சேரி காந்தி வீதி சந்திப்பில் செட்டி தெருவில் நெய்தல் ஆயுர்வேத மற்றும் பஞ்சகர்மா சிகிச்சை கிளினிக் திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது.விழாவிற்கு டாக்டர் ...
புதுச்சேரி : மேல்நிலை நீர்தேக்க தொட்டி பராமரிப்பு பணி காரணமாக முத்தியால்பேட்டை பகுதியில் வரும் 13ம் தேதி குடிநீர் வினியோகம் தடை செய்யப்படுகிறது.இதுகுறித்து பொதுப்பணித்துறை பொது ...
திருக்கனுார், : ரேஷன் கடை மூலம் அரிசி, கோதுமை வழங்க வேண்டும் என அமைச்சர் நமச்சிவாயத்திடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.மண்ணாடிப்பட்டு தொகுதி காட்டேரிக்குப்பம், லிங்காரெட்டிப் ...
திருக்கனுார்- போலீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மண்ணாடிப்பட்டு தொகுதியை சேர்ந்தவர்கள், அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.புதுச்சேரி போலீஸ் துறையில் காலியாக உள்ள ...
புதுச்சேரி : குடும்ப பிரச்னையில் கணவரிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்ற பெண் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.புதுச்சேரி லாஸ்பேட்டை அசோக் நகரை சேர்ந்தவர் வெற்றிவேல். ...
புதுடில்லி: கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், குழாய் வழி குடிநீர் இணைப்பு வழங்கும், ஜல் ஜீவன் திட்டம் திறம்பட செயல்படுத்தப்பட்டதால், கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரம் ...
திருபுவனை : நான்கு மாத கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டது குறித்து தாசில்தார் விசாரணை நடத்தி வருகிறார். திருபுவனை அடுத்த திருவண்டார்கோயில் சின்னபேட்டை சேர்ந்தவர் தினேஷ்குமார்,30; ...
புதுச்சேரி : புதுச்சேரி இ.சி.ஆரில் புதுநகரில் உள்ள வெஸ்ட்மெட் மருத்துவமனையில் நாளை 11ம் தேதி இலவச ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை முகாம் நடக்கிறது. காலை 9 மணி முதல் 12:30 மணிவரை ...