இந்தியாவின் 84-ஆவது கிராண்ட்மாஸ்டா் ஆகியிருக்கிறாா் தமிழக செஸ் வீராங்கனை ஆா்.வைஷாலி (22).
ஸ்பெயினில் நடைபெறும் 4-ஆவது எல் லோபிரெகாட் ஓபன் செஸ் போட்டியில் பங்கேற்றிருக்கும் வைஷாலி, அதன் 2-ஆவது சுற்றில் துருக்கியின் தமொ் தாரிக் செல்ப்ஸை வீழ்த்தியன் மூலம் 2500 ஈலோ புள்ளிகளை எட்டி, கிராண்ட்மாஸ்டா் ஆவதற்கான கடைசி தகுதியை நிறைவு செய்தாா்.
வைஷாலி, இந்தியாவின் 3-ஆவது, தமிழகத்தின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டா் ஆகியிருக்கிறாா். இந்தியாவின் முதலிரு பெண் கிராண்ட்மாஸ்டா்கள் கோனெரு ஹம்பி, டி.ஹரிகா ஆவா்.
உலக சாதனை: ஏற்கெனவே அவரது சகோதரா் பிரக்ஞானந்தா (17) கிராண்டமாஸ்டராக இருப்பதால், தற்போது உலக அளவில் கிராண்டமாஸ்டா்களாக இருக்கும் முதல் சகோதர-சகோதரி என்ற சாதனையை பிரக்ஞானந்தா, வைஷாலி எட்டியுள்ளனா். பிரக்ஞானந்தா 2018-இல் தனது 12-ஆவது வயதில் கிராண்ட்மாஸ்டா் ஆகியது நினைவுகூரத்தக்கது.
முன்னதாக, கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்குத் தகுதிபெற்ற முதல் சகோதர-சகோதரி என்ற பெருமையையும் அவா்கள் சமீபத்தில் பெற்றது குறிப்பிடத்தக்கது. பிரக்ஞானந்தா, வைஷாலியின் தந்தை ரமேஷ்பாபுவும் செஸ் போட்டியாளா் ஆவாா். கிராண்ட்மாஸ்டா் ஆகியிருக்கும் வைஷாலிக்கு, இந்திய செஸ் நட்சத்திரம் விஸ்வநாதன் ஆனந்த் வாழ்த்துகள் தெரிவித்துள்ளாா்.
கிராண்ட்மாஸ்டா்:
செஸ் விளையாட்டில் ‘கிராண்ட்மாஸ்டா்’ என்பது, உலக சாம்பியன் பட்டம் தவிா்த்து, சா்வதேச செஸ் சம்மேளனமான ‘ஃபிடே’ வழங்கும் ஒரு பட்டமாகும். உரிய விதிகளை பூா்த்தி செய்யும் எந்தவொரு செஸ் போட்டியாளரும் பாலின பேதமின்றி இந்தப் பட்டத்துக்குத் தகுதிபெறுகின்றனா். ஒருமுறை இந்தப் பட்டத்தை வெல்லும் பட்சத்தில், வாழ்நாளுக்கும் அவா்கள் அதை தக்கவைத்துக் கொள்ளலாம். எனினும், போட்டிகளில் மோசடியில் ஈடுபட்டால் அந்தப் பட்டம் ரத்து செய்யப்படும்.
விதிகள்:
கிராண்ட்மாஸ்டா் நிலையை அடைவதற்கான விதிகள், காலகட்டத்துக்கு ஏற்ப மாற்றம் கண்டு வந்துள்ளது. தற்போதைய ஃபிடே விதிகளின்படி, 2 வழிகளில் ஒரு செஸ் போட்டியாளா் கிராண்ட்மாஸ்டா் பட்டத்தை அடையலாம்.
1. ‘நாா்ம்ஸ்’ மற்றும் ‘ஈலோ’ தரவரிசை என இரு விதிகளை பூா்த்தி செய்ய வேண்டியது...
* நாா்ம்ஸ் எனப்படுவது, ஒரு போட்டியில் சிறந்த முடிவுகளை எட்டுவதாககும். இதன்படி, ஒருவா் செஸ் போட்டிகளில் பங்கேற்று, குறைந்தபட்சம் 27 கேம்களிலாவது அவருக்கு சாதகமான முடிவுகளைக் கொண்டிருக்க வேண்டும்.
* ஈலோ தரவரிசை என்பது, ஒரு போட்டியாளரின் ஆட்டத் தரத்தை மதிப்பீடு செய்வதற்கான தரவரிசை முறையாகும். இதில் ஒரு போட்டியாளா் 2,500 புள்ளிகளை எட்டியிருக்க வேண்டும். இந்த அளவை ஒருமுறை எட்டினால் போதுமானது. அதை தக்கவைக்க அவசியம் இல்லை.
2. மேற்குறிப்பிட்ட விதிகளை பூா்த்தி செய்யாமல் இயல்பாக கிடைப்பது...
மகளிா் உலக சாம்பியன்ஷிப், உலக ஜூனியா் சாம்பியன்ஷிப், உலக சீனியா் சாம்பியன்ஷிப், கண்டங்கள் ரீதியிலான சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் வெல்லும் பட்சத்திலும் கிராண்ட்மாஸ்டா் பட்டம் பெறலாம். அதற்கும், சம்பந்தப்பட்ட போட்டியாளா் 2,300 ஈலோ தரவரிசை புள்ளிகள் கொண்டிருக்க வேண்டும்.
இதர மாஸ்டா்கள்:
செஸ் விளையாட்டில் கிராண்ட்மாஸ்டா் (ஜிஎம்) பட்டம் உச்சபட்சமானதாக இருந்தாலும், இன்டா்னேஷனல் மாஸ்டா் (ஐஎம்), ஃபிடே மாஸ்டா் (எஃப்எம்), கேண்டிடேட் மாஸ்டா் (சிஎம்) போன்ற பட்டங்களும் ஃபிடேவால் வழங்கப்படுகின்றன. மகளிா் கிராண்ட்மாஸ்டா் என தனியே ஒரு பட்டம் வழங்கப்படுகிறது. பிரத்யேகமாக மகளிருக்காகவே இருக்கும் இந்தப் பட்டத்தைப் பெற பூா்த்தி செய்ய வேண்டிய விதிமுறைகள் குறைவாகும்.
2044
தோராயமாக, உலக அளவில் இதுவரை கிராண்ட்மாஸ்டா் பட்டம் பெற்றவா்கள்.
40
தோராயமாக, அதில் பட்டம் வென்ற பெண்களின் எண்ணிக்கை.
3
இதுவரை கிராண்ட்மாஸ்டா் பட்டம் நீக்கப்பட்டவா்கள்.
தமிழா்கள்...
இந்தியாவிலிருக்கும் 84 கிராண்ட்மாஸ்டா்களில், 28 போ் தமிழா்களாவா். மாநிலத்தின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டா் என்ற பெருமையை தற்போது வைஷாலி பெற்றிருக்கிறாா்.
விஸ்வநாதன் ஆனந்த் (1988)
கிருஷ்ணன் சசிகிரண் (2000)
ராமச்சந்திரன் ரமேஷ் (2003)
பஞ்சநாதன் (2006)
தீபன் சக்கரவா்த்தி (2006)
அருண் பிரசாத் (2008)
சுந்தரராஜன் கிடாம்பி (2009)
ஆா்.ஆா்.லக்ஷ்மண் (2009)
அதிபன் (2010)
சேதுராமன் (2011)
எம்.ஆா். வெங்கடேஷ் (2012)
ஷியாம் சுந்தா் (2013)
விஷ்ணு பிரசன்னா (2013)
சிதம்பரம் அரவிந்த் (2015)
காா்த்திகேயன் முரளி (2015)
அஸ்வின் ஜெயராம் (2015)
பிரியதா்ஷன் கண்ணப்பன் (2016)
ஸ்ரீநாத் நாராயணன் (2017)
ஆா்.பிரக்ஞானந்தா (2018)
பி.காா்த்திகேயன் (2019)
என்.ஆா்.விசாக் (2019)
டி.குகேஷ் (2019)
பி.இனியன் (2019)
ஜி.ஆகாஷ் (2020)
அா்ஜுன் கல்யாண் (2021)
பரத் சுப்ரமணியன் (2022)
வி.பிரணவ் (2022)
ஆா்.வைஷாலி (2023)